Saturday, April 15, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 2

முதல் பகுதியை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part II
****************************************

என் அன்புக்குரிய ப்ரீதம்,

முதலாண்டில் நாம் பயின்ற நேரம், ரேகிங் அதிகமாகவே இருந்தது. கிண்டல், கேலி என்பவை போக, பல சமயங்களில் சீனியர் மாணவர்கள் அடி உதையும் நமக்கு வழங்கினர். மேலும், நமது அறைகளில் இரவு எட்டு மணிக்கு மேல் விளக்கெரிவதற்கு தடா போட்டிருந்தனர். தவறி விளக்கெறிந்தால், ஆர்ப்பாட்டமாக கல் வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்தனர். அதற்கெல்லாம் அசராமல், நம் அறை ஜன்னலுக்கு இரு கெட்டியான போர்வைகளை பாதுகாப்பு அரணாக்கி, நடு இரவு வரை துணிச்சலாக விளக்கை எரிய விட்டு, நீ ஏதாவது படித்துக் கொண்டிருப்பாய். நம் அறையைத் தவிர்த்துப் பார்த்தால், விடுதியே இருளில் மூழ்கியிருக்கும். இதனால், கடுப்பான சீனியர்கள் தொடர்ந்து கல் வீசியதில், நம் அறையின் ஜன்னல் கண்ணாடியை மொத்தமாக இழந்தது! இரு வாரங்களில் கல் வீச்சும் ஒய்ந்து போனது! அதனால், எட்டு மணிக்கு மேல் படிக்க விரும்பிய 'காந்தி' வகை மாணவ நண்பர்கள், நம் அறையை நோக்கி விட்டில் பூச்சிகள் போல் படையெடுத்து நம் உறக்கத்தை கெடுத்தது தான் மிச்சம்!

அது போலவே, சீனியர்களின் அடி உதையை நீ எதிர் கொண்ட விதமும் அபாரமானது. நம் சக மாணவர்கள் சீனியர்களுக்கு அஞ்சி, 6 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வர மாட்டார்கள். நீயோ (நடுக்கத்தை வெளிக்காட்டி கொள்ளாத என்னையும் இழுத்துக் கொண்டு!) வேண்டுமென்றே கல்லூரி வளாகத்தில் அங்குமிங்கும் நடை பயில்வாய். அதனால், சீனியர் மாணவர்களின் பார்வையில் விழுந்து, நமக்கு பல தடவை அடி உதை கிடைத்தது. ஆனால், நீ நினைத்தது போலவே, ஒரு கட்டத்தில், அவர்களுக்கே அது அலுத்துப்போய், நம்மை பிடித்துப்போய், சீக்கிரமே சீனியர்களில் பலர் நமக்கு காட்·பாதர்களாகி விட்டனர். இதனால் நம் காட்டில் நல்ல மழை!

சீனியர் மாணவர்களிடமிருந்து பழைய பாடப் புத்தகங்கள் நமக்கு கிடைத்தன. அவ்வப்போது ஹோட்டலில் ஓசிச் சாப்பாடு, திரைப்பட இரவுக்காட்சிகளுக்கு விசேஷ அழைப்புகள், சீனியர் விடுதிகளுக்கு தங்கு தடையின்றி சென்று வர அனுமதி, சீனியர் மாணவிகளுடன் கடலை என்று பல அனுகூலங்கள் வாய்க்கப் பெற்றன. ஒரு முறை, ராகம் (தானம், பல்லவி!) திரையரங்கில் 'முந்தானை முடிச்சு' பார்த்து விட்டு, சீனியர்கள் சிலரோடு நாம் ஜட்கா வண்டியில் விடுதிக்கு திரும்பியது உனக்கும் மறந்திருக்காது என்று எண்ணுகிறேன்!

நீ சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவன். மாதத்தின் முதல் தேதிகளில் உன் வீட்டிலிருந்து செலவுக்கு மணியார்டரில் பணம் வந்தவுடன் நீ குபேரனாக உருவெடுப்பாய். நண்பர்கள் எங்களுக்கும் குஷி தான்! பாரி வள்ளலைப் போல் எங்களை அரவணைத்து, சினிமா, ஹோட்டல் என்று வற்புறுத்தி கூட்டிச் சென்று செலவு செய்வாயே! அதனால், மாதத்தின் கடைசி பத்து நாட்களில், டீ/பன் வாங்கக் கூட கையில் காசில்லாமல் குசேலன் போல் காட்சி அளிப்பாய். உன் முகராசியோ என்னவோ, யாராவது ஒருவர் கிருஷ்ணனாக மாறி, அந்த சமயங்களில் உன் தேவைகளை பூர்த்தி செய்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். ப்ரீதம் என்று பெயர் கொண்டதாலோ என்னவோ, கல்லூரியில் பலருக்கும் நீ பிரியமானவனாகத் திகழ்ந்தாய்!

உன்னுடனும், ஷியாமுடனும் பலமுறை சென்றுண்ட ஆர்.எஸ்.புரம் அன்னப்பூர்ணா உணவகமும்,
நாம் தேர்வு சயமங்களில் விஜயம் செய்த, வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்த "அக்ரி" வினாயகர் கோயிலும்,
நாம் ஆங்கிலத் திரைப்படங்கள் கண்டு களித்த சென்ட்ரல் திரையரங்கமும்,
மாலை நேரங்களில் உற்சாகமாக அரட்டை அடித்தபடி, நாம் தேங்காய் பன்னும் தேநீரும் சாப்பிட்ட, தடாகம் சாலைச் சந்திப்பில் அமைந்த டீக்கடையும்
என் ஞாபகத்தில் நினைவுச் சின்னங்கள் போல் குடியேறி விட்டன ! அதே போல், அன்னப்பூர்ணா உணவகத்து basement-இல் இருந்த 'சுகப்ரியா' Bar-யையும் நீ மறந்திருக்க மாட்டாய் தானே ;-)

சென்ட்ரல் திரையரங்கில், "History of the World - I" பார்த்து ரசித்ததும்,
ஸ்ரீவள்ளி டாக்கீஸில் தரையில் அமர்ந்து "கொக்கரக்கோ" படம் பார்த்ததும்,
வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு வேகு வேகென்று மிதித்து மருதமலை கோயில் சென்றதும்,
கொஞ்சமாக பீர் அருந்தி விட்டு நீயும் ஷியாமும் 'கோயில் யானை' சந்திரசேகரையும், 'பத்து' என்னும் பத்மநாபனையும் கலாய்த்ததும்,
எனக்கு சாருவிடம் ஒருவித ஈர்ப்பு இருப்பதாக (கொஞ்சம் இருந்தது!) எனக்குத் தெரியாமல் அவளிடம் சொன்னதில் அவள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் விநோதமாக நடந்து கொண்டதும்,
ஷியாமுடன் கட்டிய ஒரு பந்தயத்திற்காக, அறிமுகமில்லாத மிக அழகான முதலாண்டு மாணவி (பேர் நினைவிலில்லை!) ஒருத்தியிடம் சென்று, " I love you ! I will wait for your reply till tomorrow!" என்று அவளை அதிர்ச்சியில் உறைய விட்டு விடுவிடுவென்று திரும்பி வந்ததும்,
LP மேடம் வகுப்புகளில் attendance எடுக்கும்போதெல்லாம், "யெஸ், மதாம்!" (பிரெஞ்சில் மேடம் என்பதை 'மதாம்' என்பார்கள்) என்று வெறுப்பேற்றியதும்
மறக்கக்கூடிய விஷயங்களா, நண்பா !

உன் கூடப் பிறந்தவர் யாரும் இல்லாததால், தேர்வுக்கு முன் வரும் 'படிப்பு விடுமுறையில்' முக்கால்வாசி நேரத்தை சென்னையில் என் வீட்டிலேயே கழிப்பாய். என் அம்மா, பாட்டி, தம்பி, தமக்கை ஆகிய அனைவருக்கும் உன் மேல் மிகுந்த அன்பு உண்டு. அதுவும் என் தம்பிக்கு அக்காலத்தில் நீ ஆதர்ச நாயகனாக திகழ்ந்தாய்! என் குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து உண்ணும் (உன் வீட்டில் கிடைக்காத) வாய்ப்பிற்காக, எங்கள் வீட்டின் எளிமையான உணவைக் கூட மிகுந்த மகிழ்ச்சியோடு நீ ரசித்து உண்டதை இன்று எண்ணிப் பார்க்கையில், கண்ணில் நீர் திரையிடுகிறது, நண்பா!

கல்லூரி கலை நிகழ்ச்சி மேடைகளில் நீ பண்ணிய கலாட்டக்களை நமது கல்லூரித் தோழர்கள் இன்றும் மறக்கவில்லை!

என்றென்றும் அன்புடன்
பாலா


--- மடல் இன்னும் விரியும்!

Friday, April 14, 2006

சரத் - தவமாய் தவமிருந்து

*********************
*********************
*********************
*********************
*********************
தீபாரமணி என்ற அந்த தாயின் முதல் விமானப் பயணம் மிக்க பெருமை வாய்ந்ததாக அமைந்ததன் காரணம், அவரது தனயனின் அயராத உழைப்பும், சிறந்த கல்வியார்வமும் என்றால் அது மிகையாகாது ! இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாதில் (IIM-A) படித்துப் பட்டம் பெற்ற சரத்பாபு என்ற அவரது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட பயணம் அல்லவா அது !

மடிப்பாக்கத்தின் அருகில் ஒரு குப்பத்தில் , மிகச்சிறிய ஒரு கூரை வீட்டில், மிகுந்த சிரமங்களுக்கிடையில் வளர்க்கப்பட்ட சரத், வாழ்வில் உயரத் துடிக்கும் பல ஏழை மாணவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சரத் பள்ளியில் பயின்ற காலகட்டத்தில், தீபாரமணி ஒரு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், தினம் 30 ரூபாய் கூலிக்கு சமையல் புரிபவராகவும், பின்னர் SSLC முடித்து ஆசிரியையாகவும் பணியாற்றியிருக்கிறார். சொற்ப வருமானத்தில் தனது நான்கு பிள்ளைகளை பராமரிக்க இயலாத சூழலில், வீட்டில் உணவுப் பண்டங்கள் தயாரித்தும், சரத் மூலம் அவற்றை தெருக்களில் விற்றும், அவர் வீட்டுச் செலவை ஈடு கட்ட வேண்டி இருந்தது.

சரத், கிங்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தபோது, எப்போதும் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தது, அவரது தாயாரின் கடும் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் வைத்துப் பார்க்கும்போது, அவ்வளவு ஆச்சரியமானதாகத் தோன்றவில்லை என்று கூறலாம் ! வீட்டில் மின்சாரம் இல்லை என்பதைக் கூட ஒரு பொருட்டாக நினைக்காமல், படிப்பை மட்டுமே தன் மூச்சாக எண்ணிய சரத்திற்கு ஊக்கமளித்த அவரது ஆசிரியர்கள், அவரது படிப்புக்கான செலவையும் ஏற்றனர்.

பின்னர் சரத், BITS, பிலானியில் பொறியியற் படிப்பு படித்தபோது, அணிவதற்கு நல்ல உடைகள் கூட அவரிடம் கிடையாது; அதை அவர் பொருட்படுத்தியதும் இல்லை ! அரசாங்க உதவி மற்றும் கடன் பெற்று பொறியியற் படிப்பை முடித்த சரத், Polaris நிறுவனத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றினார். தனது கடன்களை அடைத்த பின்னர், CAT என்றழைக்கப்படும் IIM நுழைவுத் தேர்வுக்கு (இத்தேர்வு எவ்வளவு கடினமானது என்பது பெரும்பாலோர் அறிந்தது தான்!) தன்னை தயார்படுத்திக் கொள்ள கடுமையாக உழைத்தார். முதல் முறை மிக நன்றாக எழுதியும், தேர்வுக்கான கேள்விகள், தேர்வுக்கு முன்னரே வெளியான குளறுபடியால், சரத் தேர்ச்சி அடைய முடியாமல் போனது. மனம் தளராமல், இரண்டாம் முறை தேர்வெழுதி அபார மதிப்பெண்கள் பெற்றதால், இந்தியாவில் உள்ள ஆறு இந்திய மேலாண்மைக் கழகங்களிலிருந்தும் அவருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது !!!

மறுபடியும், படிப்புக்காக, கல்வி மானியத்திற்கு மேல் கடனும் வாங்க வேண்டியிருந்தது. இன்று, அகமதாபாதில் சரத் தொடங்கியுள்ள Food King Catering Services என்ற சிறிய நிறுவனத்தின் தொடக்க விழாவில், IIM-A யின் சேர்மனும், INFOSYS நிறுவனத்தின் தலைவருமான திரு.நாராயணமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் ! சரத் வாழ்வில் மென்மேலும் உயர நமது வாழ்த்துக்களைக் கூறுவோம்.

"என்ன தவம் செய்தீர்கள் அம்மா, இத்தகைய தவப்புதல்வனை ஈன்றெடுக்க!" என்று தான் அந்த உன்னதப் பெண்மணியை கேட்கத் தோன்றுகிறது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா
*********************
நன்றி: இந்து நாளேடு

Saturday, April 08, 2006

GCT கல்லூரி --- மலரும் நினைவுகள்

தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part I
*******************************************************
என் அன்புக்குரிய ப்ரீதம்,

உனது நட்பின் உன்னதத்தில் திளைத்த அந்த நாட்களை ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பறவைகள் ஒலி எழுப்பும் வனாந்திரத்தில், ஈரமான காலைப்பொழுது தரும் உளம் நிறை உற்சாத்தோடு, சிறு குழந்தையின் கரம் பிடித்து நடை பயிலும் உணர்வு எனக்கு !!

23 வருடங்களுக்கு முன்பு நடந்த நமது அந்த முதல் சந்திப்பு பளிச்சென்று நினைவில் நிற்கிறது. என் பெயர் இரண்டாவது தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றதால், நான் சற்று தாமதமாகத் தான் (வகுப்புகள் தொடங்கிய பின்) பொறியியற் கல்லூரியில் (GCT) சேர முடிந்தது. கல்லூரியில் சேர்வதற்கான ·பார்மாலிட்டிகளை முடித்து, எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு வந்து சேர மதியம் மேல் ஆகி விட்டது. விடுதியில் அவ்வளவாக ஆள் அரவமில்லை. சற்று நேரத்தில் முதலாண்டு மாணவர்கள் வகுப்புகள் முடிந்து வரத் தொடங்கினர். முதலில் வந்த சிலரிடம் நானே வலியச் சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அளவளாவிக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்திற்கு பின், புயல் போல் அவ்விடத்திற்கு வந்த நீ, குட்டைச் சுவற்றின் மேல் ஏறி அமர்ந்து, பொதுவாக, "என்னப்பா, எதைப் பத்தி குரூப் டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கீங்க ?" என்று வினவிய பின், கூட்டத்தில் புதியவனான என்னைப் பார்த்தவுடன் மலர்ச்சியோடு கையை நீட்டி, "Hi, I am Preetham from Madras, You must be from Madras, too !" என்று கூறி, நான் நீட்டிய கையைப் பற்றி குலுக்கினாய். அந்த இறுக்கமான கை குலுக்கலே, நம்மிடையே பின்னாளில் மலர்ந்த இறுக்கமான நட்புக்கு அச்சாரமாய் அமைந்தது !!!

பழகப் பழக நாம் நல்ல நண்பர்கள் ஆனோம். அப்போது ஓர் அறைக்கு இரு மாணவர்கள் என்றிருந்தனர். என்னை உன் (unofficial) ரூம்மேட் ஆக்கிக் கொள்வதற்காக, உன் ரூம்மேட் வாசுவை அறையிலிருந்து அப்புறப்படுத்த நீ எடுத்த பிரயத்தனங்களை சொல்லி மாளாது ! ஆரம்பத்திலிருந்தே உன்னைக் கண்டு சற்று மிரண்டிருந்த அவன், தன் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு, அவனைப் போல் அமைதியாக இருந்த மாணவர்கள் தங்கியிருந்த அறையில் மூன்றாவது ஆளாக தஞ்சமடைந்தான். நான் உன் 'சக அறையர்' ஆனேன் (ஆக்கப்பட்டேன்!) !!! என் official ரூம்மேட் 'மொட்டைப்'பழனி தனிக்காட்டு ராஜா ஆனான் !!!

கல்லூரி வாழ்வின் பல சமயங்களில் வெளிப்பட்ட உன் பலவித திறமைகளைக் கண்டு வியக்காத நண்பர்களே இருக்க முடியாது. மொத்தத்தில் எங்களிடையே ஒரு சூப்பர் ஸ்டார் போல் நீ விளங்கினாய் !!! ஆங்கிலத்தில் நல்ல புலமை உனக்கிருந்தது. ஆங்கிலத்தில் சிறப்பாக கட்டுரைகள் எழுதுவாய், கவிதைகள் புனைவாய். ஆங்கிலப் பேச்சு போட்டிகளில் மடை திறந்தாற் போல் முழங்கி பல முறை பரிசுகள் வென்றிருக்கிறாய் !

படிப்பிலும் நீ கெட்டிக்காரன் தான். கேள்வி ஞானம் மிக்கவனாக நீ விளங்கியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை ! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! தேர்வு சமயங்களில், நானும் நீயும் ஒன்றாக படிப்போம். பல நேரங்களில் என்னை சத்தமாக படிக்கச் சொல்லி, மெத்தையில் கண் மூடி சயனித்தபடி நான் கூறுவதை உள்வாங்கிக் கொண்டு, சரியாக பன்னிரெண்டு அடித்தவுடன் குட்நைட் சொல்லி நீ உறங்கச் சென்று விடுவாய் !!! நானோ தொடர்ந்து காலை நான்கு மணி வரை படித்துக் கொண்டிருப்பேன். என் கடின உழைப்பின் பலனாக மொத்தத்தில் உன்னை விட மூன்று அல்லது நான்கு மதிப்பெண்கள் மட்டுமே அதிகம் பெற முடிந்தது கூட என் பாக்கியமே !!! நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் என்னை விட நீ தான் அதிகம் சந்தோஷப்பட்டிருக்கிறாய், நண்பா !!!

ஆங்கில இசை வீடியோக்களை பார்த்தே திறமையாக நடனம் ஆடக் கற்று, கல்லூரி கலை விழா ஒன்றில் அற்புதமாக நடனமாடி நீ பரிசு வென்றது என் நினைவில் பசுமையாக உள்ளது! விளையாட்டுகளிலும் நீ கலக்கியிருக்கிறாய், கிரிக்கெட் தவிர! ஹாக்கி, கால்பந்து, டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, தடகளம், வாலிபால் என்று பல விளையாட்டு அணிகளிலும் இடம் பெற்று உன் திறமையை காட்டியிருக்கிறாய்.

ஆனால், கிரிக்கெட் அணி கேப்டன் 'மொட்டை' ஷியாமுடன் ஒரு தடவை மல்லுக்கு நின்று, அணியில் சேர்ந்து, துவக்க ஆட்டக்காரனாக களமிரங்கி, கண்மூடித்தனமாக மட்டையை வீசி, முதல் பந்திலேயே நடு ஸ்டம்பை இழந்து பரிதாபமாக நின்றது, ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது :) அதே போல, ஷியாம், ஒரு முறை, நம் கல்லூரி சார்பில் களமிரங்கி, உடுமலைப்பேட்டை கிரிக்கெட் கிளப்புக்காக அப்போது விளையாடிக் கொண்டிருந்த ராபின் சிங்கின் (அவர் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானவர்!) பௌலிங்கை அனாயசமாக எதிர்கொண்டு எடுத்த மின்னல் வேகச் சதத்தையும் என்னால் மறக்க முடியாது
!!!

நான் இன்று ஆங்கிலத்தில் ஓரளவு திறமையாக எழுதவும், பேசவும் செய்வதற்கு, நான் அன்று உன்னோடு பார்த்த பல ஆங்கில திரைப்படங்களும், நீ படிக்கத் தந்த புத்தகங்களும் காரணமாக அமைந்தன. உன்னிடமிருந்து, வாசிப்பனுபவம், அவைக்கஞ்சாமை, தியானம், தன்னம்பிக்கை, மனவுறுதி என்று பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். எனக்கு Richard Bach, Somerset Maughm, Kahlil Gibran, Aurobindo, Ayn Rand போன்றோரை அறிமுகப்படுத்தியவனும் நீயே !

ஆனால், உன்னுடன் சேர்ந்து வாழ்வதென்பது என்னைப் போன்ற ஒரு சாதாரணனுக்கு கடினமான ஒன்றாகவே ஆரம்பத்தில் இருந்தது. ஏனெனில், 'எதையும் ஒரு முறை' செய்து பார்ப்பதும், extremes-களில் நினைத்தபோது நிலை கொண்டு வாழ்வதும் உனக்கு மட்டுமே இயல்பானவை !!! ஒரு நான்கு மாதங்கள், வகுப்புகள், உடற்பயிற்சி, தியானம், கோயில்கள், படிப்பு, நேரத்துக்கு உறக்கம் என்று யாருடனும் அதிகம் உறவாடாமல் ஒரு யோகி போல் வாழ்வாய் ! திடீரென்று ஒரு நாள் அவையனைத்தையும் புறந்தள்ளி விட்டு, பாட்டு, கூத்து, நண்பர்களுடன் அரட்டை, இரவுக் காட்சிகள், உற்சாக பானங்கள், உச்சக்கடலை என்று உல்லாச வாழ்க்கைக்கு தாவி விடுவாய் ! அவ்வாறு உன் வாழ்க்கை முறையை நீ அடிக்கடி மாற்றுவது எனக்கு போகப்போக பழகி விட்டது. ஒரு சமயத்திலும், எதையும் என் மேல் நீ திணித்ததில்லை, எதற்கும் என்னை நீ வற்புறுத்தியதுமில்லை !!!

முதலாண்டில் நாம் பயில்கையில் அடிக்கடி நடந்தேறும் 'கல்லெறி வைபவம்' உனக்கு ஞாபகம் வருகிறதா ?

என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************************
--- மடல் இன்னும் விரியும் !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails